குறள் (Kural) - 205

குறள் (Kural) 205
குறள் #205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

பொருள்
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

Tamil Transliteration
Ilan Endru Theeyavai Seyyarka Seyyin
Ilanaakum Matrum Peyarththu.

மு.வரதராசனார்

யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.

சாலமன் பாப்பையா

தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.

கலைஞர்

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

பரிமேலழகர்

இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை 'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்' என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இலன் என்று தீயவை செய்யற்க-எவனேனும் யான் பொருளில்லாதவன் என்று கருதி அதைப் பெறற் பொருட்டுப் பிறர்க்குத் தீமையானவற்றைச் செய்யாதிருக்க; செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்-செய்வானாயின் மீண்டும் வறியனாவான். தீவினையான் வந்த பொருளை விரைந்து இழந்து விடுவானாதலின் மீண்டும் வறியனாவான் என்றார். 'இலன்' இரண்டுள், முன்னது தன்மை யொருமைக் குறிப்பு வினைமுற்று; பின்னது படர்க்கையாண்பாற் குறிப்புவினையாலணையும் பெயர். 'மற்று' அசைநிலை. உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது.

மணக்குடவர்

நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.

புலியூர்க் கேசிகன்

‘இவன் துணையிலன்’ என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும்; செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)தீவினையச்சம் (Theevinaiyachcham)