குறள் (Kural) - 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
பொருள்
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.
Tamil Transliteration
Marandhum Piranketu Soozharka Soozhin
Aranjoozham Soozhndhavan Ketu.
மு.வரதராசனார்
பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
சாலமன் பாப்பையா
மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
கலைஞர்
மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.
பரிமேலழகர்
பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக் கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக, சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் - எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும் வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன் சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும் என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது, அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை எண்ணலும் ஆகாது என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
பிறன்கேடு மறந்தும் சூழற்க-ஒருவன் பிறனுக்குக் கேடு செய்யும் வினையை மறந்தும் எண்ணாதிருக்க; சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும்-எவனேனும் எண்ணின், எண்ணினவனுக்குக் கேட்டை அறத்தெய்வமே செய்ய எண்ணும். தப்பாது பழிக்குப் பழிவாங்க வலிமை மிக்க அறத் தெய்வம் உடனிருத்தலால், ஒருவனுக்குத் தீங்கை எண்ணுதலும் ஆகாது என்பதாம்.
மணக்குடவர்
பிறனுக்குக் கேட்டை மறந்துஞ் சூழாதொழிக: சூழ்வனாயின் அவனாற் சூழப்பட்டவன் அதற்கு மாறாகக் கேடு சூழ்வதன்முன்னே சூழ்ந்தவனுக்குக் கேட்டைத் தீமை செய்தார்க்குத் தீமை பயக்கும் அறந்தானே சூழும். இது தீமை நினையினுங் கேடு தருமென்றது.
புலியூர்க் கேசிகன்
பிறனுக்குக் கேடு செய்வதைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | தீவினையச்சம் (Theevinaiyachcham) |