குறள் (Kural) - 201

குறள் (Kural) 201
குறள் #201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

பொருள்
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

Tamil Transliteration
Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar
Theevinai Ennum Serukku.

மு.வரதராசனார்

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

சாலமன் பாப்பையா

தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

கலைஞர்

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

பரிமேலழகர்

தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்கு; தீவினையார் அஞ்சார். தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-ஆயின் அதைச் செய்தறியாத சீரியோர் அஞ்சுவர். தீவினைக்குக் கரணியமான இறுமாப்பு தீவினை யென்னும் கருமியமாகச் சார்த்திக் கூறப்பட்டது. அஞ்சாமை மனச்சான்றின் மழுக்கத்தாலும் அச்சம் அதன் கூர்மையாலும் ஏற்படுவனவாம்.

மணக்குடவர்

என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.

புலியூர்க் கேசிகன்

தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்சமாட்டார்கள்; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)தீவினையச்சம் (Theevinaiyachcham)