குறள் (Kural) - 202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
பொருள்
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.
Tamil Transliteration
Theeyavai Theeya Payaththalaal Theeyavai
Theeyinum Anjap Patum.
மு.வரதராசனார்
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
சாலமன் பாப்பையா
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
கலைஞர்
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.
பரிமேலழகர்
தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)
ஞா.தேவநேயப் பாவாணர்
தீய தீயவே பயத்தலால்-ஒருவன் தனக்கின்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம். தீயானது தொட்டவரைச் சுடினும் எரிப்பினும், சமைத்தலும் குளிர் போக்கலும் நோய் நீக்கலும் கொடுவிலங்கு விரட்டலுமாகிய நன்மைகளையுஞ் செய்தலாலும்; தீவினையானது செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின்பு வேறொரு காலத்திலும் வேறொரிடத்திலும் வேறோ ருடம்பிலுஞ் சென்று சுடுதலாலும், எவ்வகை நன்மையுஞ் செய்யாமையாலும்; 'தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றார். தீவினை நன்மை செய்யாமை பற்றியே 'தீயவே' என்னும் பாடம் இங்குக் கொள்ளப்பட்டது.
மணக்குடவர்
தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.
புலியூர்க் கேசிகன்
தீய செயல்கள் பிறர்க்கும் தமக்கும் தீமை விளைவித்தலால், தீயசெயல்களைத் தீயினும் கொடியதாகச் சான்றோர் நினைத்து அஞ்சுவார்கள்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | தீவினையச்சம் (Theevinaiyachcham) |