குறள் (Kural) - 200

குறள் (Kural) 200
குறள் #200
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

பொருள்
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

Tamil Transliteration
Solluka Sollir Payanutaiya Sollarka
Sollir Payanilaach Chol.

மு.வரதராசனார்

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

சாலமன் பாப்பையா

சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.

கலைஞர்

பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

பரிமேலழகர்

சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய சொற்களைச் சொல்லுக, சொல்லில் 82 பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக. ('சொல்லில்' என்பது இருவழியும் மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது. "வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடி 39) என்பது போல. இதனால் சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

சொல்லின் பயன் உடைய சொல்லுக - ஏதேனு மொன்றைச் சொல்லின் பயனுள்ள சொற்களையே சொல்லுக; சொல்லில் பயனிலாச் சொல் சொல்லற்க - சொற்களிற் பயனில்லாதவற்றைச் சொல்லாதிருக்க. ஒரே பொருளை உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் கூறியது அதை வலியுறுத்தற்காதலின் , கூறியது கூறலன்று. ஒரே சொல் பொருள் மாறாது திரும்பத் திரும்ப வந்தது 'சொற்பொருட் பின்வருநிலை' யணியாம்.

மணக்குடவர்

சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக. இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.

புலியூர்க் கேசிகன்

சொன்னால், பயன் தருகின்ற சொற்களையே யாவரும் சொல்லுக; பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பயனில சொல்லாமை (Payanila Sollaamai)