குறள் (Kural) - 199

குறள் (Kural) 199
குறள் #199
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

பொருள்
மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.

Tamil Transliteration
Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha
Maasaru Kaatchi Yavar.

மு.வரதராசனார்

மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா

மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.

கலைஞர்

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.

பரிமேலழகர்

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் - பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார், 'மருள் தீர்ந்த' மாசுஅறு காட்சியவர் - மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். "('தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்ட.து)

ஞா.தேவநேயப் பாவாணர்

மருள் தீரந்த மாசு அறு காட்சியவர் - மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் -பயனில்லாத சொற்களை மறந்துஞ் சொல்லார். மயக்கம் ஐயமுந் திரிபும். குற்ற மற்ற அறிவு மெய்யறிவு அல்லது தூய அறிவு.

மணக்குடவர்

பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்; மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார், இது தெளிவுடையார் கூறாரென்றது.

புலியூர்க் கேசிகன்

மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் கூட ஒரு காலத்திலும் சொல்ல மாட்டார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பயனில சொல்லாமை (Payanila Sollaamai)