குறள் (Kural) - 198

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
பொருள்
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
Tamil Transliteration
Arumpayan Aayum Arivinaar Sollaar
Perumpayan Illaadha Sol.
மு.வரதராசனார்
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
கலைஞர்
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
பரிமேலழகர்
அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கு அரிய பயன்களை ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அரும்பயன் ஆயும் அறிவினார் - அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவுடையார்; பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் - மிகுந்த பயனில்லாத சொற்களை ஒருபோதும் சொல்லார். அறிதற்கரிய பயன்களாவன நாள்கோளியக்கமும் மெய்ப் பொருளியலும் வீடுபேறும் முதலியன. பெரும்பயனில்லாத சொல்லை சொல்லாரெனவே , சிறு பயன் தரும் சொல்லும் அவர் வாயினின்று வராதென்பது பெறப்படும். இதனால் அரும்பயனாராயும் அறிவினார்க்குச் சிறுபயன் சொல்லும் அறவே விலக்கப்பட்டது.
மணக்குடவர்
அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.
புலியூர்க் கேசிகன்
அருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயன் இல்லாத சொற்களை ஒருபோதுமே சொல்ல மாட்டார்கள்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | பயனில சொல்லாமை (Payanila Sollaamai) |