குறள் (Kural) - 197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
பொருள்
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
Tamil Transliteration
Nayanila Sollinunj Cholluka Saandror
Payanila Sollaamai Nandru.
மு.வரதராசனார்
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா
நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
கலைஞர்
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
பரிமேலழகர்
நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக - சான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்று - அவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று ('சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
சான்றோர் நயன் இல சொல்லினும் சொல்லுக - அறிவுடையோர் நேர்மையில்லாத சொற்களை என்றேனும் தப்பித் தவறிச் சொல்லினும் சொல்லுக; பயன் இல சொல்லாமை நன்று.. ஆயின் எக்கரணியத்தையிட்டும் பயனில்லாத சொற்களைச் சொல்லாதிருத்தலே அவர்க்கு நன்றாம். இது நேர்மையில்லாச் சொல்லை நெருக்கடி நிலைமையிற் சொல்ல இசைவளித்ததன்று; நேர்மையில்லாச் சொல்லினும் பயனில்லாச் சொல் தீயதென்பதை உணர்த்துவதேயாம்.
மணக்குடவர்
சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது.
புலியூர்க் கேசிகன்
நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாமலிருத்தல் நல்லது
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | பயனில சொல்லாமை (Payanila Sollaamai) |