குறள் (Kural) - 196

குறள் (Kural) 196
குறள் #196
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.

பொருள்
பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

Tamil Transliteration
Payanil Sol Paaraattu Vaanai Makanenal
Makkat Padhati Yenal.

மு.வரதராசனார்

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

சாலமன் பாப்பையா

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

கலைஞர்

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

பரிமேலழகர்

பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயனற்ற சொற்களைப் பலகாலும் விரும்பிச் சொல்பவனை மகன் (மாந்தன்) என்று சொல்லற்க; மக்கட் பதடி எனல் - மக்களுட் பதர் என்று சொல்லுக. அல் என்னும் வியங்கோளீறு முன்பு எதிர்மறையிலும் பின்பு உடன்பாட்டிலும் வந்தது. பதர் உள்ளீடல்லாத கூல மணி. மக்கட்பதர் அறிவாகிய உள்ளீடற்றவன் அல்லது அற்றவள்.

மணக்குடவர்

பயனில்லாதவற்றைப் பலர் முன்பு கூறுதல், விருப்பமில்லாதவற்றை நட்டார் மாட்டுச் செய்தலினுந் தீதே, இது பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின் கண்ணுந் தீமை பயக்கு மென்றது.

புலியூர்க் கேசிகன்

பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை, ‘மனிதன்’ என்றே சொல்லக் கூடாது; மக்களுள், ‘பதர்’ என்றே கொள்ளல் வேண்டும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பயனில சொல்லாமை (Payanila Sollaamai)