குறள் (Kural) - 195

குறள் (Kural) 195
குறள் #195
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

பொருள்
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

Tamil Transliteration
Seermai Sirappotu Neengum Payanila
Neermai Yutaiyaar Solin.

மு.வரதராசனார்

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

சாலமன் பாப்பையா

இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

கலைஞர்

நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்.

பரிமேலழகர்

பயன் இல நீர்மையுடையார் சொலின் - பயன் இலவாகிய சொற்களை இனிய நீர்மையுடையார் சொல்லுவாராயின், சீர்மை சிறப்பொடு நீங்கும் - அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும். (நீர்மை: நீரின் தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நீர்மை உடையார் பயன் இல சொலின் - இனிய தன்மையுடைய உயர்ந்தோரும் பயனற்ற சொற்களைச் சொல்வாராயின்; சீர்மை சிறப்பொடு நீங்கும் -அதனால் அவருடைய உயர்வும் அது பற்றிய மதிப்பும் நீங்கிவிடும். 'சொலின்' என்னும் நிலைப்பாட்டு வினையெச்சம் சொல்லாமையை உணர்த்திற்று.

மணக்குடவர்

பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவாராயின் அவர்க்கு உண்டான சீர்மையும் சிறப்பும் போம் இது நீர்மையுடையா ராயினும் எல்லா நன்மையும் போமென்றது

புலியூர்க் கேசிகன்

நல்ல பண்பு உடையவர்களும், பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்களானால், அவர்களுடைய சிறந்த தன்மையும் சிறப்பும் நீங்கிப் போகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பயனில சொல்லாமை (Payanila Sollaamai)