குறள் (Kural) - 194

குறள் (Kural) 194
குறள் #194
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.

பொருள்
பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

Tamil Transliteration
Nayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap
Panpilsol Pallaa Rakaththu.

மு.வரதராசனார்

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

சாலமன் பாப்பையா

பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

கலைஞர்

பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்.

பரிமேலழகர்

பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து - பயனோடு படாத பண்புஇல் சொற்களை ஒருவன் பலரிடைச்சொல்லுமாயின், நயன் சாரா நன்மையின் நீக்கும் - அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும். (பண்பு- இனிமையும், மெய்யும் முதலாய சொற்குணங்கள், 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர் மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப்பட்டன.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பல்லாரகத்துப் பயன் சாராப் பண்பு இல்சொல் - ஒருவன் பலரிடத்தும் பயனொடு பொருந்தாத பண்பற்ற சொற்களைச் சொல்லுதல்; நயன் சாரா நன்மையின் நீக்கும் - நேர்மையொடு பொருந்தாது அவனை நற்குணத்தினின்று நீக்கும். சொற் பண்புகள் ஓசையினிமை , இலக்கண வழுவின்மை, பொருள் நன்மை முதலியன. சொல்லும் என்பது சொல்லெச்சம். 'சாரா' இரண்டனுள் முன்னது ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்; பின்னது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

மணக்குடவர்

ஒருவன் ஒரு பயனைச் சாராத பண்பில்லாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவானாயின் அவன் நடு சாராது நன்மையினீங்கும். இது விரும்பப்படாமையுமன்றி நன்மையும் பயவாதென்றது.

புலியூர்க் கேசிகன்

பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையும் தராததோடு, உள்ள நன்மையையும் போக்கிவிடும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பயனில சொல்லாமை (Payanila Sollaamai)