குறள் (Kural) - 193

குறள் (Kural) 193
குறள் #193
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.

பொருள்
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

Tamil Transliteration
Nayanilan Enpadhu Sollum Payanila
Paarith Thuraikkum Urai.

மு.வரதராசனார்

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

சாலமன் பாப்பையா

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

கலைஞர்

பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

பரிமேலழகர்

பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பயன் இல பாரித்து உரைக்கும் உரை - ஒருவன் பயனில்லாத பொருள்களைப் பற்றி விரித்துரைக்கும் உரையே; நயன் இலன் என்பது சொல்லும் - அவன் நேர்மை (நீதி) யில்லாதவன் என்பதை அறிவிக்கும். அறிவித்தலும் பயனளவிற் சொல்லுதலை ஒக்குமாதலின் 'சொல்லும்' என்றார்.

மணக்குடவர்

நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.

புலியூர்க் கேசிகன்

பயன் இல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, ‘அவன் நல்ல பண்பில்லாதவன்’ என்பதை உலகுக்கு அறிவிக்கும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பயனில சொல்லாமை (Payanila Sollaamai)