குறள் (Kural) - 192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
பொருள்
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
Tamil Transliteration
Payanila Pallaarmun Sollal Nayanila
Nattaarkan Seydhalir Reedhu.
மு.வரதராசனார்
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
கலைஞர்
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
பரிமேலழகர்
பயன் இல பல்லார்முன் சொல்லல் - பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. ('விருப்பமில' - வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
பயன் இல பல்லார்முன் சொல்லல் -ஒருவன் பயனற்ற சொற்களை அறிவுடையோர் பலர்முன் சொல்லுதல் ; நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது - விரும்பப்படாத செயல்களைத் தன் நண்பரிடத்துச் செய்தலினுந் தீயதாம். நயத்தல் விரும்புதல். நயம் விருப்பம். 'நயன்' போலி. அறிவுடையோர்க்குப் பயனில் சொல்லின் மீதுள்ள வெறுப்பின் அளவைக் கூறியவாறு.
மணக்குடவர்
பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, இது மக்கட் பண்பிலனென்றது.
புலியூர்க் கேசிகன்
பலபேர் முன்பாகப் பயனற்ற பேச்சைப் பேசுதல், நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதை விடத் தீமையானது ஆகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | பயனில சொல்லாமை (Payanila Sollaamai) |