குறள் (Kural) - 191

குறள் (Kural) 191
குறள் #191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

பொருள்
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்.

Tamil Transliteration
Pallaar Muniyap Payanila Solluvaan
Ellaarum Ellap Patum.

மு.வரதராசனார்

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

சாலமன் பாப்பையா

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

கலைஞர்

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.

பரிமேலழகர்

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் வெறுக்குமாறு வீண் சொற்களைச் சொல்பவன்; எல்லாரும் எள்ளப்படும் - எல்லாராலும் இழிவாய் எண்ணப்படுவான். எல்லாரும் என்று பிற்குறித்ததனால் பல்லார் என்று முற்குறித்தது அறிவுடையாரை யென்பது உய்த்துணரப்படும். அறிவுடையார் வெறுக்கவே அவரைப் பின்பற்றி ஏனையோரும் வெறுப்பர் என்பது கருத்து. எள்ளுதல் மனத்தின் செயல்.

மணக்குடவர்

பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்,

புலியூர்க் கேசிகன்

பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாகப் பேசப் படுவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பயனில சொல்லாமை (Payanila Sollaamai)