குறள் (Kural) - 190

குறள் (Kural) 190
குறள் #190
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

பொருள்
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

Tamil Transliteration
Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin
Theedhunto Mannum Uyirkku.

மு.வரதராசனார்

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?.

சாலமன் பாப்பையா

புறம்பேச அடுத்தவர் குற்றத்தைப் பார்ப்பவர், பேசும் தம் குற்றத்தையும் எண்ணினால், நிலைத்து இருக்கும் உயிர்க்குத் துன்பமும் வருமோ?.

கலைஞர்

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

பரிமேலழகர்

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.

ஞா.தேவநேயப் பாவாணர்

ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - புறங்கூறுவார் தாம் காணும் பிறர் குற்றம்போல் தம்குற்றத்தையுங் காணவல்லராயின்; மன்னும் உயிர்க்கு தீது உண்டோ - நிலைபெற்ற மக்களுயிர்க்கு வரக்கூடிய துன்பமுண்டோ ? அயலாரையும் பகைவரையுங் குறிக்கும் ஏதிலார் என்னும் சொல், இங்குப்பிறர் என்னும் பொருட்டாய் நின்றது. பிறர் குற்றம் போல் தம் குற்றமுங் காண்டலருமை நோக்கிக் 'காண்கிற்பின்' என்றார். கண்டவழித் தீவினை நிகழாதாதலின் அதனால் துன்பமுமிராதென்பதாம். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இனி , காண்கின்பின் என்று பிரிப்பினும் அமையும். உடல்நில்லா தொழியவும் உயிர் நிலைபெற்று நிற்றலால் மன்னுமுயிர் என்றார்.

மணக்குடவர்

பிறனில்லாதவிடம் பார்த்துப் புறஞ்சொற் கூறுவானது உடற்பாரத்தை நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம்: அல்லது போக்கும். இது புறங்கூறுவார்க்குத் துணையாவாரில்லை யென்றது.

புலியூர்க் கேசிகன்

அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புறங்கூறாமை (Purangooraamai)