குறள் (Kural) - 187

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
பொருள்
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.
Tamil Transliteration
Pakachchollik Kelirp Pirippar Nakachcholli
Natpaatal Thetraa Thavar.
மு.வரதராசனார்
மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
சாலமன் பாப்பையா
கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.
கலைஞர்
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.
பரிமேலழகர்
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார். (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். "கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை" (கலி. மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.)
ஞா.தேவநேயப் பாவாணர்
நகச் சொல்லி நட்பாடல் தேற்றாதவர் - மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர்; பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - பிளவுண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியப்பண்ணுவர். கேளிரையும் என்னும் சிறப்பும்மை தொக்கது. நட்பாடல் என்னுங் குறிப்பால் அயலாரோடும் என்பது வருவிக்கப்பட்டது. அவ்வும்மை எச்சவும்மை. தம் கேளிர் என்னாது கேளிர் என்று மட்டுங் குறித்ததினால், பிறரினத்தார்க்குள்ளும் புறங்கூற்றாற் பிரிவினையுண்டாக்குவர் என்பது பெறப்படும். இங்ஙனம் எல்லார்க்கும் பொல்லாதவராவர் என்பது கருத்து. தேறாதவர் என்னும் தன்வினை தேற்றாதவர் என்று பிறவினை வடிவில் நின்றது, "கனவிலுந்தேற்றாதார் மாட்டு" (குறள்: 1054) என்புழிப்போல.
மணக்குடவர்
நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார். இது நட்டவரை யிழப்பர் என்றது.
புலியூர்க் கேசிகன்
‘மகிழ்ச்சியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை’ என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்து விடுவர்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | புறங்கூறாமை (Purangooraamai) |