குறள் (Kural) - 188

குறள் (Kural) 188
குறள் #188
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

பொருள்
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?.

Tamil Transliteration
Thunniyaar Kutramum Thootrum Marapinaar
Ennaikol Edhilaar Maattu.

மு.வரதராசனார்

நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.

சாலமன் பாப்பையா

தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.

கலைஞர்

நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?.

பரிமேலழகர்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம் நெருங்கிய வுறவினர் குற்றத்தையும் அவர்புறத்துத் தூற்றும் இயல்புடைய வன்னெஞ்சர்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் செய்தியில் எத்தகையவராவார். 'குற்றமும்' என்பது துன்னியாரை நோக்கிய சிறப்பும்மை, தூற்றுதல் என்பது களத்திற் பொலி தூற்றுதல்போலப் பலருமறியப் பரப்புதல். மிகக் கொடியவராவர் என்பது பற்றியும் அறியப்படாமை பற்றியும் 'என்னை கொல்' என்றார். 'என்னர் கொல்' என்னும் பாடமும் ஏற்றதே. 'கொல்' ஐயம்.

மணக்குடவர்

தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ? இது யாவரோடும் பற்றிலரென்றது.

புலியூர்க் கேசிகன்

நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர், அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புறங்கூறாமை (Purangooraamai)