குறள் (Kural) - 186

குறள் (Kural) 186
குறள் #186
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

பொருள்
பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.

Tamil Transliteration
Piranpazhi Kooruvaan Thanpazhi Yullum
Thirandherindhu Koorap Patum.

மு.வரதராசனார்

மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

சாலமன் பாப்பையா

அடுத்தவன் குறையை அவன் இல்லாத போது எவன் கூறுகிறானோ, அவனது குறை அவன் இல்லாதபோது இன்னொருவனால் கூறப்படும்.

கலைஞர்

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.

பரிமேலழகர்

பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன்பழி பலவற்றுள்ளும் உளையும் திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும். ('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர். தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும் திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின், 'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

பிறன்பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் - தன் சொந்தப் பழிகளுள்ளும் கடுமையானவை தெரிந்தெடுக்கப்பட்டு அப்பிறனால் தன் எதிரிலேயே கூறப்படுவான். புறத்து என்பது அதிகாரத்தால் வந்தது. 'திறன்' வலிமை, அது இங்குத் திறனான பழிகளைக் குறித்தது; ஆதலால் ஆகுபொருளது. திறந் தெரிந்து கூறுவதற்குக் கரணியம் புறங்கூற்றைப் பற்றி அறிவிக்கப் பட்டமை அல்லது கேள்விப்பட்டமையென்பது, கருதலளவையால் அறியப்படும். செய்யாமற் செய்த புறங் கூற்றிற்குப் பழிவாங்குஞ் செய்கையாதலாலும், 'திறந் தெரிந்து' என்னுங் குறிப்பினாலும், நேரிற் சொல்லுதலும் உய்த்துணரப்படும்.

மணக்குடவர்

பிறனுடைய பழியைச் சொல்லுமவன் தனக்குண்டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத் தெரிந்து பிறராற் சொல்லப் படுவன்.

புலியூர்க் கேசிகன்

பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புறங்கூறாமை (Purangooraamai)