குறள் (Kural) - 185

குறள் (Kural) 185
குறள் #185
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

பொருள்
ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

Tamil Transliteration
Aranjollum Nenjaththaan Anmai Puranjollum
Punmaiyaar Kaanap Patum.

மு.வரதராசனார்

அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.

சாலமன் பாப்பையா

அறத்தைப் பெரிதாகப் பேசும் ஒருவன் மனத்தால் அறவோன் அல்லன் என்பதை அவன் புறம்பேசும் இழிவினைக் கொண்டு கண்டுகொள்ளலாம்.

கலைஞர்

ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக்கொண்டே அவன் அறவழி நிற்பவன் அல்லன் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

பரிமேலழகர்

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம் சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று சொல்லினும் அது தன் மனத்தானாச் சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல் கொள்ளப்படாது என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறங்கூறுவா னொருவன் அறம் நல்ல தென்று சொல்லினும், அவன் அதை நெஞ்சாரச் சொல்கின்றானல்லன் என்னும் உண்மை; புறஞ் சொல்லும் புன்மையாற் காணப்படும் - அவன் புறஞ் சொல்லுதற்குக் கரணியமான சிறுதன்மையால் அறியப்படும். மனந்திருந்தாமையால் அவன் சொல் நம்பப்பெறா தென்பதாம். இனி, அறம் நல்ல தென்று ஒருவனது மனச்சான்று ஒப்புக் கொள்ளினும், வழக்கத்தினாலும் விருப்பினாலும் நெஞ்சுரமின்மையாலும் அவன் அதற்கு மாறாக ஒழுகலாமாகலின், ' அறங் கூறும் நெஞ்சத்தானன்மை' என்பதற்கு, அறத்தின் தன்மையைப் பற்றிக் கூறித் தகுதியுள்ள மனத்தானல்லாமை என்று உரைப்பினு மமையும்.

மணக்குடவர்

ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல்லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும். இஃது இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது.

புலியூர்க் கேசிகன்

அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதான அந்த இழி செயலால் தெளிவாக அறியலாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புறங்கூறாமை (Purangooraamai)