குறள் (Kural) - 184

குறள் (Kural) 184
குறள் #184
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

பொருள்
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.

Tamil Transliteration
Kannindru Kannarach Chollinum Sollarka
Munnindru Pinnokkaach Chol.

மு.வரதராசனார்

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

சாலமன் பாப்பையா

ஒருவன் முகத்திற்கு எதிரே முகதாட்சணியம் இல்லாமல் பேசினாலும், அவன் எதிரில் இல்லாமல் இருக்கும்போது பின்விளைவை எண்ணாமல் அவனைப் பற்றிப் பேச வேண்டா.

கலைஞர்

நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.

பரிமேலழகர்

கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச் சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான் தொழில் சொல்மேல் ஏற்றப் பட்டது. இவை மூன்று பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவனெதிரே நின்று கண்ணோட்டமின்றிச் சொல்லினும்; முன் இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன் எதிரில் இல்லாவிடத்துப் பின் விளையுந் தீமையை நோக்காத புறங்கூற்றுச் சொற்களைச் சொல்லா தொழிக. 'பின் ' ஆகு பொருளது. சொல்வான் செயல் சொல்லின் மேலேற்றப் பட்டது. இதில் வந்துள்ளது முரணணி.

மணக்குடவர்

ஒருவன் கண்ணெதிரே நின்று கண்பார்த்த லொழியச் சொல்லினும் அமையும்; பிற்காலத்து அவன் முன்னே நின்று எதிர் முகம் நோக்க வொண்ணாத சொல்லைச் சொல்லா தொழிக, இது புறங் கூறுதல் தவிர்க வென்றது: இதனாற் கடிய சொற் கூறலும் ஆகாதென்றது.

புலியூர்க் கேசிகன்

நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக; நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புறங்கூறாமை (Purangooraamai)