குறள் (Kural) - 183

குறள் (Kural) 183
குறள் #183
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

பொருள்
கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

Tamil Transliteration
Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal
Arangootrum Aakkath Tharum.

மு.வரதராசனார்

புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா

காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.

கலைஞர்

கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

பரிமேலழகர்

புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக் கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின், 'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்' ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.)

ஞா.தேவநேயப் பாவாணர்

புறங் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்டவிடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல் அவனுக்கு அற நூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும். இறந்தவழிப் புறங்கூறலின்மையால் ' அறங் கூறும் ஆக்கத்தரும்' என்றார். ஆக்கம் மறுமையிற் பெறும் நன்மை. ' அறம்' ஆகு பெயர். தரும் என்னும் சொல். "தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த". (512) என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி தன்மை முன்னிலையில் வராது படர்க்கையில் வந்ததினால், இடவழு வமைதியாம்.

மணக்குடவர்

காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல் சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.

புலியூர்க் கேசிகன்

பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)புறங்கூறாமை (Purangooraamai)