குறள் (Kural) - 182
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
பொருள்
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
Tamil Transliteration
Aranazheei Allavai Seydhalin Theedhe
Puranazheeip Poiththu Nakai.
மு.வரதராசனார்
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
சாலமன் பாப்பையா
அறம் என்பதே இல்லை என அடித்துப் பேசிப் பாவத்தைச் செய்வதைக் காட்டிலும் ஒருவனைக் காணாதபோது புறம்பேசிக் காணும்போது பொய்யாகச் சிரிப்பது பெருங்கேடு.
கலைஞர்
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.
பரிமேலழகர்
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன் என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி, அதன்மேல் பாவங்களைச் செய்தலினும் தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை - ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச் சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல். (உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் - ஒளியைக் கோறல்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
புறன் அழீஇப் பொய்த்து நகை - ஒருவனைக்காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்டவிடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல்; அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறம் என்றே ஒன்றுமில்லையென அழித்துக்கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம். அறனழித்தலினும் புறனழித்தலும் அல்லவை செய்தலினும் பொய்த்து நகையும் தீதென நிரனிறையாகக் கொள்க. பழித்துரையால் அழித்தலாவது பெயரைக் கெடுத்தல். ' அழீஇ' ஈரிடத்தும் பிறவினைப் பொருளில் வந்த சொல்லிசையளபெடை.
மணக்குடவர்
அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வதனினும் தீது, ஒருவனைக் காணாத விடத்து இழித்துரைத்துக் கண்டவிடத்துப் பொய் செய்து நகுதல். இது பாவத்தினும் மிகப் பாவமென்றது.
புலியூர்க் கேசிகன்
அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | புறங்கூறாமை (Purangooraamai) |