குறள் (Kural) - 18

குறள் (Kural) 18
குறள் #18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

பொருள்
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.

Tamil Transliteration
Sirappotu Poosanai Sellaadhu Vaanam
Varakkumel Vaanorkkum Eentu.

மு.வரதராசனார்

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

சாலமன் பாப்பையா

மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

கலைஞர்

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.

பரிமேலழகர்

வானோர்க்கும் ஈண்டுச் சிறப்போடு பூசனை செல்லாது - தேவர்கட்கும் இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் விழவும் பூசையும் நடவாது; வானம் வறக்குமேல் - மழை பெய்யாதாயின் (நைமித்திகத்தோடு கூடிய நித்தியம் என்றார் ஆகலின் 'செல்லாது' என்றார். 'உம்மை' சிறப்பு உம்மை. நித்தியத்தில் தாழ்வு தீரச் செய்வது நைமித்திகம் ஆதலின், அதனை முற்கூறினார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

வானம் வறக்குமேல் - மழை பெய்யாவிடின்; ஈண்டு வானோர்க்கும் பூசனைசிறப்பொடு செல்லாது - இவ்வுலகில் தேவர்க்கும் அன்றாடு பூசையும் ஆட்டைவிழாவும் நடைபெறா. அன்றாடு பூசை, கதை நிகழ்ச்சி குறியாதும் கொண்டாட்ட மின்றியும் ஒரு சிலரான அக்கம் பக்கத்தார் மட்டும் கலந்தும் கலவாமலும், வழக்கம்போற் சிற்றளவான வழிபாடாகக் கோவிற்குள் மட்டும் நடைபெறுவது; ஆட்டைவிழா ஒருகதை நிகழ்ச்சி குறித்தும் கொண்டாட்டத்துடனும் நாட்டு மக்களையெல்லாம் வரவழைத்தும், பேரளவாக ஊர்வலஞ்செய்து நடைபெறுவது. உம்மை சிறப்பும்மை. பூசுதல் = கழுவுதல், தெய்வப் படிமையை நீரால் துப்புரவாக்குதல். பூசு-பூசி. பூசித்தல்=பூச்சாத்தியும் தேங்காய் பழம் முதலியன படைத்தும் வழிபடுதல். உழவு என்பது பயிர்த்தொழிலின் பின்வினைகளையும் குறித்தல்போல், பூசித்தல் என்பதும் வழிபாட்டின் பின்வினைகளையும் குறித்தது. பூசி-பூசை. ஒ.நோ: ஆசு (பற்று) -- ஆசி (அவாவு)-ஆசை (அவா).பூசி-பூசனை,பூசனம். ஐ,அனை,அனம் என்பன தமிழ் ஈறுகளே. பூசை-பூசாரி. ஆரி தலையாரி என்பதிற்போல் ஓர் ஈறு. பூசாச்சாரி (பூசை+ஆச்சாரி) என்னும் வழக்கு வடமொழியிலுமில்லை. பூ செய் என்பது பூசை என்றாயிற்றென்று கொள்வது பொருந்தாது. பூசி-பூஜ் (வ.), பூசை-பூஜா(வ.), பூசனம்-பூஜன(வ.), பூசனை-பூஜனா(வ.). வேத ஆரியர்க்கு வேள்வி வேட்டலேயன்றிப் படிமைப்பூசையும் கோவில் வழிபாடும் இல்லை. பூஜ் என்னும் சொல்லும் வேதத்திலில்லை. பாரதம் முதலிய பிற்கால வடபனுவல்களிலேயே அது வழங்குகின்றது.

மணக்குடவர்

சிறப்புச் செய்யப்படுகின்ற விழவு பூசனை நடவாது, வானம் புலருமாகில் தேவர்களுக்கும் இவ்வுலகின்கண். மழைபெய்யாக்கால் வருங் குற்றங் கூறுவார் முற்பட நான்குவகைப்பட்ட அறங்களில் பூசை கெடுமென்றார்.

புலியூர்க் கேசிகன்

மழையானது முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறமாட்டா

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)பாயிரவியல் (Paayiraviyal)
அதிகாரம் (Adhigaram)வான்சிறப்பு (Vaansirappu)