குறள் (Kural) - 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
பொருள்
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
Tamil Transliteration
Thaanam Thavamirantum Thangaa Viyanulakam
Vaanam Vazhangaa Thenin.
மு.வரதராசனார்
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
சாலமன் பாப்பையா
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
கலைஞர்
இப்பேருலகில்
மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும்,
தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
பரிமேலழகர்
வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும் உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்; தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)
ஞா.தேவநேயப் பாவாணர்
வானம் வழங்காதெனின் - மழை பெய்யாவிடின்; வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா-இப் பரந்தவுலகின்கண் அறக்கொடையும் தவமும் ஆகிய இருவகை நல்வினைகளும் செய்யப்பெறா. தானம் என்பது, நல்வழியில் ஈட்டப்பட்ட பொருளை, தெய்வப் பற்றுக் கரணியமாகக் கோவிற்கும் அடியார்க்கும் , அருளுடைமை கரணியமாக இரப்போர்க்கும், ஈடின்றிக் கொடுத்தல். தவம் என்பது ஐம்புலவடக்கம் பற்றித் துறவறத்தார் கடுமையாகவும், மகப்பேறு முதலியன கருதி இல்லறத்தார் எளிமையாகவும், உடலை வருத்துதல். கடுமையாக வருத்தும் வகைகள் துறவறவியலிற் கூறப்பெறும், எளிமையாக வருத்தும் வகைகள் உண்டி சுருக்குதல், எளிய வுடையுடுத்தல், இன்பம் விலக்கல் முதலியன. "மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்." என்று திருவள்ளுவரும், "முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்து" என்று பட்டினத்தடிகளும் பாடியிருப்பதால், தவம் துறவறத்தின் மேலதென்று வரையறுப்பது பொருந்தாது. தானம் பிறர்க்குக்கொடுப்பது; தவம் தன்னை ஒடுக்குவது. தானம் என்பது தென்சொல்லென்பதை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலிற் கண்டு தெளிக.
மணக்குடவர்
தானமும் தவமுமாகிய விரண்டறமு முளவாகா; அகன்ற வுலகத்துக்கண் மழை பெய்யாதாயின். இது தானமும் தவமுங் கெடுமென்றது.
புலியூர்க் கேசிகன்
மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் (Paayiraviyal) |
அதிகாரம் (Adhigaram) | வான்சிறப்பு (Vaansirappu) |