குறள் (Kural) - 17
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
பொருள்
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
Tamil Transliteration
Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili
Thaannalkaa Thaaki Vitin.
மு.வரதராசனார்
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
சாலமன் பாப்பையா
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.
கலைஞர்
ஆவியான
கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல்
இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச்
சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
பரிமேலழகர்
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் - மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின். (உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து"(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.
ஞா.தேவநேயப் பாவாணர்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் - மாபெருங்கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தடிந்துதான் நல்காதாகிவிடின் - முகில் (மேகம்) அதனைக் குறைத்துப் பின்புதான் அதன்கண் பெய்யாது விடின். தன்னியல்பு குறைதலாவது மீன் முதலியன கலியாமையும் முத்து முதலியன விளையாமையும். கடலைக் குறைத்தலென்பது அதில் நீரை முகத்தல். இது பண்டை நம் பிக்கை. 'கடல்குறை படுத்தநீர் கல்குறைபட வெறிந்து' என்று பரிபாடலும் (20), "இலங்க லாழியி னான்களிற் றீட்டம்போற் கலங்கு தெண்டிரை மேய்ந்து கனமழை". என்று சிந்தாமணியும் (32) கூறுதல் காண்க. முகப்பது முகில். முகந்தபின் மேலெழுவது எழிலி. கடல்நீர் ஆவியாக மாறி மேலெழுவது முகிலாவதால், பண்டை நம்பிக்கையும் ஒருமருங்கு உண்மை யானதே. மழைக்கு மூலமாகிய மாபெரு நீர்நிலைக்கும் மழை வேண்டும் என்று மழையின் சிறப்புக் கூறியவாறு. உம்மை சிறப்பும்மை.
மணக்குடவர்
நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின். தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.
புலியூர்க் கேசிகன்
மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் (Paayiraviyal) |
அதிகாரம் (Adhigaram) | வான்சிறப்பு (Vaansirappu) |