குறள் (Kural) - 179
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
பொருள்
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
Tamil Transliteration
Aranarindhu Veqkaa Arivutaiyaarch Cherum
Thiranarin Thaange Thiru.
மு.வரதராசனார்
அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
சாலமன் பாப்பையா
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருப்பதே அறம் என்னும் அறிவுடையோரின் பெருமையை அறிந்து, திருமகள் தானே அவரிடம் போய் இருப்பாள்.
கலைஞர்
பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.
பரிமேலழகர்
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் - இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும். (அடைதற்கு ஆம் கூறு: காலமும், இடனும், செவ்வியும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் வெஃகாமையின் குணம் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார் - இது அறமென்று தெளிந்து பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரிடத்து; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கான திறங்களையறிந்து அவற்றின்படியே சென்றடைவாள். 'திரு' ஆகுபெயர். திறங்கள் காலமும் இடமும் வினையும் பிறன் பொருளை விரும்பாமையாற் செல்வம் சுருங்காதிருப்பதோடு புதிதாகத் தோன்றவுஞ்செய்யும் என்பது இதனாற் கூறப்பட்டது.
மணக்குடவர்
அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது.
புலியூர்க் கேசிகன்
அறத்தை அறிந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையாரை, திருமகள், தான் சேர்வதற்குரிய திறன் தெரிந்து சென்று அடைவாள்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | வெஃகாமை (Veqkaamai) |