குறள் (Kural) - 178

குறள் (Kural) 178
குறள் #178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

பொருள்
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

Tamil Transliteration
Aqkaamai Selvaththirku Yaadhenin Veqkaamai
Ventum Pirankaip Porul.

மு.வரதராசனார்

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.

சாலமன் பாப்பையா

செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே.

கலைஞர்

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.

பரிமேலழகர்

செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.)

ஞா.தேவநேயப் பாவாணர்

செல்வத்திற்கு அஃகாமை யாது எனின் - ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு வழி எதுவெனின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறனுக்குத்தேவேயான அவனது கைப்பொருளைத்தான் விரும்பாமையாம். அஃகாமை இங்கு ஆகு பொருளது.

மணக்குடவர்

செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, இது செல்வ மழியாதென்றது.

புலியூர்க் கேசிகன்

ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெஃகாமை (Veqkaamai)