குறள் (Kural) - 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
பொருள்
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
Tamil Transliteration
Iraleenum Ennaadhu Veqkin Viraleenum
Ventaamai Ennunj Cherukku.
மு.வரதராசனார்
விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
சாலமன் பாப்பையா
பின் விளைவை எண்ணாமல் அடுத்தவர் பொருளை விரும்பிக் கவர்ந்தால், அது நமக்கு அழிவைக் கொடுக்கும்; அதற்கு ஆசைப்படாத செல்வமோ வெற்றியைக் கொடுக்கும்.
கலைஞர்
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.
பரிமேலழகர்
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வௌவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும். [பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.]
ஞா.தேவநேயப் பாவாணர்
எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - பின் விளைவதை எண்ணிப்பாராது ஒருவன் பிறன் பொருளைக் கைப்பற்றக் கருதின், அக்கருத்து அவனுக்கு முடிவைத் தரும்; வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும் - பிறன் பொருளை விரும்பாமை யென்னும் பெருமிதம் ஒருவனுக்கு வெற்றியைத் தரும். முடிவு பொருளிழந்தாராலும் அரசனாலும் நேர்வது. "கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று" என்று ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூறியமை காண்க (சிலப். 20 - 64). வெற்றி வெஃகுவார் எல்லார் மீதும் ஆசை மீதுங்கொண்டது.
மணக்குடவர்
விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும். அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும். இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.
புலியூர்க் கேசிகன்
வரும் துன்பத்தை நினையாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால், அது கெடுதலைத் தரும்; அதனை விரும்பாதிருத்தல் என்னும் பெருமையே வெற்றியைத் தரும்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | வெஃகாமை (Veqkaamai) |