குறள் (Kural) - 177

குறள் (Kural) 177
குறள் #177
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

பொருள்
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.

Tamil Transliteration
Ventarka Veqkiyaam Aakkam Vilaivayin
Maantar Karidhaam Payan.

மு.வரதராசனார்

பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

சாலமன் பாப்பையா

பிறர் பொருளை அவர் விரும்பாதிருக்க, நாம் விரும்பிப் பெற்று அனுபவிக்கும்போது அதன் பயன் நல்லதாக இல்லை என்று அறிவதால், பிறர் பொருளைக் கவர்வதற்கு விரும்ப வேண்டா.

கலைஞர்

பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.

பரிமேலழகர்

வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது)

ஞா.தேவநேயப் பாவாணர்

வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க -பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை விரும்பற்க ; விளைவயின் பயன் மாண்டற்கு அரிது ஆம் - பின்பு நுகருங் காலத்தில் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதலில்லையாதலின். 'விளைவயின்' வினைத்தொகை. அருமை இங்கு இன்மை மேற்று.

மணக்குடவர்

பிறர்பொருளை விரும்பிப் பெறுகின்ற ஆக்கத்தை வேண்டாதொழிக; அது பயன்படுங் காலத்தில் ஆகும் பயன் நன்றாதலில்லையாதலான்.

புலியூர்க் கேசிகன்

பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வதால் வரும் ஆக்கத்தை எவருமே விரும்ப வேண்டாம்; செயல் அளவில் அதன் பயன் நன்மையாவது என்பது எப்போதும் அரிதாகும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெஃகாமை (Veqkaamai)