குறள் (Kural) - 176

குறள் (Kural) 176
குறள் #176
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

பொருள்
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

Tamil Transliteration
Arulveqki Aatrinkan Nindraan Porulveqkip
Pollaadha Soozhak Ketum.

மு.வரதராசனார்

அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.

சாலமன் பாப்பையா

அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.

கலைஞர்

அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈ.டுபட்டால் கெட்டொழிய நேரிடும்.

பரிமேலழகர்

அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் - அன்பை மட்டுமன்றி அருளையும் விரும்பி இல்லறத்தின்கண் நின்றவன் , பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளைவிரும்பி அதைக் கைப்பற்றத் தீய வழிகளை ஆராய்ந்தெண்ணிய மட்டிற்கெட்டு விடுவான். விருந்தோம்பல் ஒப்புரவொழுகல் ஈகை ஆகிய அறங்கட்கு அன்பும் , இரப்போர்க்கீதற்கு அருளும் வேண்டியிருப்பதால் , இல்லறமும் ஓரளவு அருள்நெறிப்பட்டதாம். ஆதலால் , இல்லறத்தைத் துறவறத்திற்கு ஆறென்று பரிமேலழகர் கூறியது முழுதும் பொருந்தாது. சூழ்வு வெளிப்பட்டவுடன் பொருளையிழக்க விருந்தாரால் தீங்குநேர்தலின் , 'சூழக்கெடும்' என்றார்.

மணக்குடவர்

அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.

புலியூர்க் கேசிகன்

அருளை விரும்பி நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்றவன், பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயல்களைச் செய்ய நினைத்தால், கெட்டுப் போய்விடுவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெஃகாமை (Veqkaamai)