குறள் (Kural) - 175

குறள் (Kural) 175
குறள் #175
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

பொருள்
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?.

Tamil Transliteration
Aqki Akandra Arivennaam Yaarmaattum
Veqki Veriya Seyin.

மு.வரதராசனார்

யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா

பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.

கலைஞர்

யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?.

பரிமேலழகர்

அஃகி அகன்ற அறிவு என்னாம் - நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் - பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். ('யார்மாட்டும் வெறிய செய்த'லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் 'அறிவு என்னாம்' என்றார்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அஃகி அகன்ற அறிவு என் ஆம் - உணர்வால் நுணுகிப் பொருளாற் பரந்த ஒருவரது கல்வியறிவால் என்ன பயனாம்? வெஃகி யார்மாட்டும் வெறிய செயின் -அவர் பிறர் பொருளை விரும்பி எல்லாரிடத்தும் தம் அறிவொடு பொருந்தாத செயல்களைச் செய்வாராயின். யார் மாட்டும் வெறிய செய்தலாவது , நல்லார் பொல்லார் சிறியார் , பெரியார் , இளையார் மூத்தார் , ஆடவர் பெண்டிர், நலவர் பிணியர், என்னும் வேறுபாடின்றி , இழிந்தனவுங் கடியனவுஞ் செய்தல். வெறுமை அறிவென்னும் உள்ளீடின்மை. அறிவாற் பயனின்மையின் 'என்னாம்' என்றார்.

மணக்குடவர்

நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.

புலியூர்க் கேசிகன்

ஒருவன் எவரிடத்திலிருந்தும் பொருளைக் கவர நினைத்துப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமாகவும் விரிவானதாகவும் வளர்ந்த அவனது அறிவால் ஏதும் பயனில்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெஃகாமை (Veqkaamai)