குறள் (Kural) - 174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
பொருள்
புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.
Tamil Transliteration
Ilamendru Veqkudhal Seyyaar Pulamvendra
Punmaiyil Kaatchi Yavar.
மு.வரதராசனார்
ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத அறிவை உடையவர், யாம் வறுமை அடைந்தோம் என்று எண்ணியும் பிறர் பொருளை விரும்பார்.
சாலமன் பாப்பையா
ஏதும் இல்லாத ஏழையாய் இருக்கிறோமோ என எண்ணி, ஐம்புலன் ஆசைகளையும் வென்ற பேர் அறிஞர், பிறர் பொருளைக் கவரமாட்டார்.
கலைஞர்
புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்ப மாட்டார்.
பரிமேலழகர்
இலம் என்று வெஃகுதல் செய்யார் - 'யாம் வறியம்' என்று கருதி, அது தீர்தற்பொருட்டுப் பிறர் பொருளை விரும்புதல் செய்யார்; புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் வென்ற குற்றமில்லாத காட்சியினை உடையார். (வெல்லுதல்: பாவ நெறிக்கண் செல்ல விடாமை. புலம்வென்ற புன்மை இல் காட்சியவர்க்கு வறுமை இன்மையின், வெஃகுதலும் இல்லையாயிற்று. புன்மையில் காட்சி: பொருள்களைத் திரிபு இன்றி உணர்தல்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர்; இலம் என்று வெஃகுதல் செய்யார் - யாம் பொருளிலேம் என்று எண்ணி அவ்வின்மையைத் தீர்த்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார். புலம் வெல்லுதல் தீய வழியில் இன்புறாது மனத்தைத்தடுத்தல். 'புன்மையில் காட்சி' ஐயந்திரிபறப் பொருள்களை யறிதல். அதாவது, பிறர்பொருள் மீது தமக்குரிமையில்லையென்றும், அதைக் கவரின் அது நிலையாதாகையாற் பின்னும் வறுமையுண்டாகுமென்றும் , ஆகவே , அக்கவர்வால் இருமையிலுந் துன்பமன்றி யின்பமில்லை யென்றும் , உணர்தல்.
மணக்குடவர்
வறிய மென்று பிறர்பொருளை விரும்புதல் செய்யார்: ஐம்புலனையும் வென்ற புன்மையிலாத தெளிவுடையார். இது தெளிவுடையார் செய்யா ரென்றது.
புலியூர்க் கேசிகன்
ஐம்புலன்களையும் வென்ற குறை இல்லாத அறிவாளர்கள், ‘யாம் பொருளில்லாதேம்’ என்ற வறுமை நிலையிலும் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | வெஃகாமை (Veqkaamai) |