குறள் (Kural) - 173
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
பொருள்
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.
Tamil Transliteration
Sitrinpam Veqki Aranalla Seyyaare
Matrinpam Ventu Pavar.
மு.வரதராசனார்
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
சாலமன் பாப்பையா
அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.
கலைஞர்
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.
பரிமேலழகர்
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். ['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.]
ஞா.தேவநேயப் பாவாணர்
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர் பொருளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார்; மற்றின்பம் வேண்டுபவர் - அறத்தால் வருவதும் நிலையானதும் பேரள வினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடையோர். இன்பத்தின் சிறுமை காலமும் அளவும் தீமையும் பற்றியது. மற்று வேறு. ஏகாரம் தேற்றம்.
மணக்குடவர்
சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.
புலியூர்க் கேசிகன்
நிலையான இன்பத்தை விரும்புகிறவர்கள், கவரும் பொருளால் வரும் சிறிய இன்பத்தை விரும்பி, அறன் அல்லாத செயல்களைச் செய்ய மனம் விரும்பமாட்டார்கள்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | வெஃகாமை (Veqkaamai) |