குறள் (Kural) - 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
பொருள்
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்.
Tamil Transliteration
Patupayan Veqkip Pazhippatuva Seyyaar
Natuvanmai Naanu Pavar.
மு.வரதராசனார்
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
சாலமன் பாப்பையா
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.
கலைஞர்
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈ.டுபடமாட்டார்.
பரிமேலழகர்
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.)
ஞா.தேவநேயப் பாவாணர்
நடுவு அன்மை நாணுபவர் - நடுவுநிலையன்மைக்கு அஞ்சி நாணுபவர்; படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளைக் கவர்வதனால் தமக்குண்டாகும் பயனை விரும்பிப் பழிக்கத் தக்க செயல்களைச் செய்யார். 'நடுவு' தமவும் பிறவும் ஒப்ப நாடிப் பிறவுந் தம்போற் பேணுதல்.
மணக்குடவர்
தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர். இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.
புலியூர்க் கேசிகன்
நடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யவோ மாட்டார்கள்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | வெஃகாமை (Veqkaamai) |