குறள் (Kural) - 171

குறள் (Kural) 171
குறள் #171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

பொருள்
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.

Tamil Transliteration
Natuvindri Nanporul Veqkin Kutipondrik
Kutramum Aange Tharum.

மு.வரதராசனார்

நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா

பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

கலைஞர்

மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.

பரிமேலழகர்

நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் - 'பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று' என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் - அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.'நன்பொருள் வெஃகின்'என்றார், 'பொன்ற' என்பது 'பொன்றி' எனத் திரிந்து நின்றது. 'செய்து' என்பது சொல்லெச்சம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

நடுவு இன்றி நல் பொருள் வெஃகின்-பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் நடுவுநிலைமையில்லாது அவரது நற்செல்வத்தின்மேல் ஒருவன் ஆசைவைப்பின்; குடிபொன்றி - அவன் குடிகெட்டு; குற்றமும் ஆங்கே தரும் - அத்தீய ஆசைவைப்பு அவனுக்கு மறுமைத் துன்பத்திற்கேதுவாகிய தீவினைக் குற்றத்தையும் உண்டாக்கும். அறவழியில் ஈட்டப்பட்டு நல்வழியிற் செலவிடப்பெறும் செல்வத்தை 'நன்பொருள்' என்றார். பொன்றி என்பது பொன்றியபின் என்னும் பொருளது.

மணக்குடவர்

நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது.

புலியூர்க் கேசிகன்

நடுவுநிலைமை இல்லாமல், பிறரது நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப் போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)வெஃகாமை (Veqkaamai)