குறள் (Kural) - 170

குறள் (Kural) 170
குறள் #170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பொருள்
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.

Tamil Transliteration
Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar
Perukkaththil Theerndhaarum Il.

மு.வரதராசனார்

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

சாலமன் பாப்பையா

பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.

கலைஞர்

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.

பரிமேலழகர்

அழுக்கற்று அகன்றாரும் இல்லை - அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - அச் செயல் இலாதார் பெருக்கத்தின் நீங்கினாரும் இல்லை. (இவை இரண்டு பாட்டானும் கேடும் ஆக்கமும் வருவதற்கு ஏது ஒருங்கு கூறப்பட்டது)

ஞா.தேவநேயப் பாவாணர்

அழுக்கற்று அகன்றாரும் இல்லை-பொறாமைப் பட்டுப் பெரியவராயினாருமில்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அக்குணமில்லாதவர் பேராக்கத்தினின்று நீங்கினாருமில்லை. இது பழவினையால் தாக்குண்ணாத பிறப்பின் நிலைமையைக் கூறுவது.

மணக்குடவர்

அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதியுள்ளுங் கொண்டு செலுத்தி விடும். ஒரு பாவி- நிகரில்லாத பாவி, இது செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்கு மென்றது.

புலியூர்க் கேசிகன்

உலகில் பொறாமையினால் மேன்மை அடைந்தாரும் இல்லை; பொறாமை இல்லாததால் பொருள் பெருக்கத்தில் குறைந்த வறுமையானவரும் இல்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அழுக்காறாமை (Azhukkaaraamai)