குறள் (Kural) - 167

குறள் (Kural) 167
குறள் #167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

பொருள்
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

Tamil Transliteration
Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval
Thavvaiyaik Kaatti Vitum.

மு.வரதராசனார்

பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

சாலமன் பாப்பையா

பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

கலைஞர்

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

பரிமேலழகர்

அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அழுக்காறு உடையானை-பிறராக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும்-செங்கோலத்தினளாகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விட்டு நீங்கும். அவ்வை அக்கை. தம் அவ்வை தவ்வை; தம் அக்கை தமக்கை என்பது போல. திருமகளின் அக்கை வறுமைக்குத் தெய்வமாதலின், அவளுக்குக் காட்டுதல் என்பது இரண்டாம் வேற்றுமையுருபு நாலாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். 'விடும்' என்பது இங்குத் தலைமையாய் வந்த தனிவினை.

மணக்குடவர்

அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அழுக்காறாமை (Azhukkaaraamai)