குறள் (Kural) - 168

குறள் (Kural) 168
குறள் #168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

பொருள்
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.

Tamil Transliteration
Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth
Theeyuzhi Uyththu Vitum.

மு.வரதராசனார்

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

சாலமன் பாப்பையா

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

கலைஞர்

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.

பரிமேலழகர்

அழுக்காறு என ஒரு பாவி - அழுக்காறு என்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி; திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் - தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து,மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும். (பண்பிற்குப் பண்பி இல்லையேனும், தன்னை ஆக்கினானை இருமையுங்கெடுத்தற் கொடுமை பற்றி, அழுக்காற்றினைப் 'பாவி' என்றார், கொடியானைப் 'பாவி' என்னும் வழக்கு உண்மையின். இவை ஆறு பாட்டானும் அழுக்காறு உடைமையது குற்றம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

அழுக்காறு என ஒரு பாவி-பொறாமை யென்று சொல்லப்படும் ஒப்பற்ற கரிசன் (பாவி) திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்-தன்னை யுடையவனை இம்மைக்கண் செல்வங்கெடுத்து மறுமைக்கண் நரகத்திற் புகுத்தி விடுவான். பொறாமைக் குணத்தை ஒரு கொடியனாகக் குறித்தது ஆட்படையணி (Personification). தீயுழி என்பது எரிவாய் நரகத்தின் பெயர். விடும் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. கரிசி (பாவம்)-கரிசன் (ஆண்பால்), கரிசு (பெண் பால்).

மணக்குடவர்

அழுக்காற்றைச் செய்து பெரியராயினாரும் இல்லை: அச்செயலிலாதார் பெருக்கத்தி னீங்கினாரு மில்லை.

புலியூர்க் கேசிகன்

பொறாமை என்னும் ஒப்பற்ற கொடிய ‘பாவி’, ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செலுத்திவிடும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அழுக்காறாமை (Azhukkaaraamai)