குறள் (Kural) - 166

குறள் (Kural) 166
குறள் #166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.

Tamil Transliteration
Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum
Unpadhooum Indrik Ketum.

மு.வரதராசனார்

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

சாலமன் பாப்பையா

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

கலைஞர்

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.

பரிமேலழகர்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் - ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்; உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் - உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும். (கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல். 'சுற்றம் கெடும்' எனவே அவன் கேடு சொல்லாமையே பெறப்பட்டது. பிறர் பேறு பொறாமை தன் பேற்றையே அன்றித் தன் சுற்றத்தின் பேற்றையும் இழப்பிக்கும் என்பதாம்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்-ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பவன் மட்டு மன்றி அவன் உறவினரும்; உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும்-உண்ணும் பொருளும் உடுக்கும் பொருளு மின்றிக் கெடுவர். சுற்றமும் என்னும் எச்சவும்மை தொக்கது. ஒரு செல்வனது பொருளைக் கண்டு பொறாமைப் படுவதினும் ஒரு செல்வன் ஓர் ஏழைக்குக் கொடுப்பதைப் பொறாமையால் தடுப்பது மிகக் கொடியதாதலின், அக் கொடுமை செய்தவன் தன் சுற்றத்தோடும் உண்பதும் உடுப்பதுமின்றிக் கெடுவான் என்றார். இவ் விளைவு பொறாமைக் குற்றத்தோடு ஏழை வயிற்றெரிச்சலும் கூடுவதால் நேர்வது. ஊணுடை யென்னாது உண்பது முடுப்பதும் என்றமையால், உண்ணத்தக்கனவும் உடுக்கத்தக்கனவுமான எவ்வகைப் பொருளையுமிழப்பர் என்பது பெறப்படும். 'சுற்றம்' தொழிலாகு பெயர். சுற்றியிருக்கும் இனம் சுற்றம். அளபெடை ஈரிடத்தும் இன்னிசை பற்றியது.

மணக்குடவர்

பிறனொருவன் மற்றொருவனுக்குக் கொடுப்பதனை அழுக்காற்றினாலே விலக்குமவனது சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும். இது நல்குரவு தருமென்றது.

புலியூர்க் கேசிகன்

இன்னொருவன் பிறனுக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுகிறவனின் குடும்பம், உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் கெடும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அழுக்காறாமை (Azhukkaaraamai)