குறள் (Kural) - 165

குறள் (Kural) 165
குறள் #165
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.

பொருள்
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

Tamil Transliteration
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar
Vazhukka?yum Keteen Padhu.

மு.வரதராசனார்

பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

சாலமன் பாப்பையா

பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.

கலைஞர்

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

பரிமேலழகர்

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது-பகைவர் கேடு செய்யத் தவறினும் பொறாமை தப்பாது கேடு செய்வதாதலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் -பொறாமையுள்ளவர்க்குக் கேடு செய்ய அது ஒன்றே போதுமானது; வேறு பகை வேண்டிய தில்லை. உம்மை எதிர்மறைப் பொருட்டு. அதுவே என்னும் பிரிநிலை யேகாரம் தொக்கது.

மணக்குடவர்

அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம்; அதுவே போதும்; பகைவர் கேடு செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அழுக்காறாமை (Azhukkaaraamai)