குறள் (Kural) - 164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
பொருள்
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
Tamil Transliteration
Azhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin
Edham Patupaakku Arindhu.
மு.வரதராசனார்
பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.
சாலமன் பாப்பையா
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.
கலைஞர்
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈ.டுபடமாட்டார்கள்.
பரிமேலழகர்
அழுக்காற்றின் அல்லவை செய்யார் - அழுக்காறு ஏதுவாக அறனல்லவற்றைச் செய்யார் அறிவுடையார்; இழுக்கு ஆற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து - அத்தீநெறியால் தமக்கு இருமையினும் துன்பம் வருதலை அறிந்து. (அறன் அல்லவையாவன: செல்வம், கல்வி, முதலியன உடையார்கண் தீங்கு நினைத்தலும், சொல்லுதலும், செய்தலும் ஆம்.)
ஞா.தேவநேயப் பாவாணர்
அழுக்காற்றின் அல்லவை செய்யார்-அறிவுடை யோர் பொறாமை கொண்டு அதனால் அறனல்லாதவற்றைச் செய்யார்; இழுக்கு ஆற்றின ஏதம் படுபாக்கு அறிந்து-அத்தீய நெறியால் தமக்கு இருமையிலுங் கேடு வருதலை யறிந்து. அல்லவை செய்தலாவது, கல்வி செல்வம் அதிகாரம் ஆற்றல் முதலியன வுடையார்க்குத் தீங்கு எண்ணுதலும் சொல்லுதலும் செய்தலுமாம். பாக்கு ஒரு தொழிற்பெயரீறு.
மணக்குடவர்
அழுக்காற்றினானே அறமல்லாதவற்றைச் செய்யார்: நல்லோர் அவ்வறத்தைத் தப்பின நெறியினாற் குற்றம் வருவதை யறிந்து.
புலியூர்க் கேசிகன்
‘பொறாமை’ என்னும் தவறான எண்ணத்தால் துன்பமே உண்டாவதை அறிந்து, அறிவாளர், பொறாமையால் தீவினைகளைச் செய்ய மாட்டார்கள்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | அழுக்காறாமை (Azhukkaaraamai) |