குறள் (Kural) - 163

குறள் (Kural) 163
குறள் #163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

பொருள்
அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

Tamil Transliteration
Aranaakkam Ventaadhaan Enpaan Piranaakkam
Penaadhu Azhukkarup Paan.

மு.வரதராசனார்

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

சாலமன் பாப்பையா

பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

கலைஞர்

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

பரிமேலழகர்

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான் - பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான். ('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஆக்கம் அறன் வேண்டாதான் என்பான் -இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவனென்று சொல்லப்படுகின்றவன்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்- பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவனாவன். பொறாமைக்காரன் பிறனுக்கு ஒரு தீங்குஞ் செய்ய இயலாது தனக்கே கேட்டை வருவித்துக் கொள்கின்றான் என்பது, இதனாற் கூறப்பட்டது.

மணக்குடவர்

தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான். இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.

புலியூர்க் கேசிகன்

பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அழுக்காறாமை (Azhukkaaraamai)