குறள் (Kural) - 162

குறள் (Kural) 162
குறள் #162
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

பொருள்
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

Tamil Transliteration
Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum
Azhukkaatrin Anmai Perin.

மு.வரதராசனார்

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா

எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

கலைஞர்

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

பரிமேலழகர்

யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாவர் மாட்டும் அழுக்காற்றினின்று நீங்குதலை ஒருவன் பெறுமாயின்; விழுப்பேற்றின் அஃது ஒப்பது இல்லை - மற்று அவன் பெறும் சீரிய பேறுகளுள் அப்பேற்றினை ஒப்பது இல்லை. (அழுக்காறு பகைவர் மாட்டும் ஒழிதற்பாற்று என்பார், 'யார் மாட்டும்' என்றார். அன்மை-வேறாதல். இவை இரண்டு பாட்டானும் அழுக்காறு இன்மையது குணம் கூறப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

யார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் - யாரிடத்தும் பொறாமையில்லா தொழுகுதலை ஒருவன் பெறுமாயின்; விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை - அவன் பெறுஞ் சிறந்த பேறுகளுள் அதை யொப்பது வேறு ஒன்றும் இல்லை. 'யார் மாட்டும் ' என்றதால் , பகைவரிடத்தும் பொறாமை கொள்ளுதல் விலக்கப்பட்டது.

மணக்குடவர்

விழுமிய பேறுகளுள் யார் மட்டும் அழுக்காறு செய்யாமையைப் பெறுவனாயின், அப்பெற்றியினை யொப்பது பிறிதில்லை. இஃது அழுக்காறு செய்யாமை யெல்லா நன்மையினும் மிக்கதென்றது.

புலியூர்க் கேசிகன்

ஒருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கின்ற தன்மையைப் பெறுவானாயின், மேலான பேறுகளில் அதற்கு இணையாகச் சிறந்தது எதுவும் இல்லை

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அழுக்காறாமை (Azhukkaaraamai)