குறள் (Kural) - 161

குறள் (Kural) 161
குறள் #161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

பொருள்
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

Tamil Transliteration
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu
Azhukkaaru Ilaadha Iyalpu.

மு.வரதராசனார்

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா

உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

கலைஞர்

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

பரிமேலழகர்

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - ஒருவன் தன் நெஞ்சத்தின்கண் அழுக்காறு என்னும் குற்றம் இல்லாத இயல்பினை; ஒழுக்காறாக் கொள்க - தனக்கு ஓதிய ஒழுக்க நெறியாகக் கொள்க. [இயல்பு - அறிவோடு கூடிய தன்மை. அத்தன்மையும் நன்மை பயத்தலின், ஒழுக்க நெறி போல உயிரினும் ஓம்புக என்பதாம்.]

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; ஓழுக்காறாக்கொள்க-தனக்குரிய ஓழுக்க நெறியாகக்கொள்க. இயல்பு இயல்பான தன்மை ஒழுக்காறாக் கொள்ளுதல் உயிரினுஞ் சிறப்பாகப் பேணிக் காத்தல்.

மணக்குடவர்

ஒருவன் தன்னெஞ்சத்து அழுக்காறு இல்லாத வியல்பைத் தனக்கு ஒழுக்க நெறியாகக் கொள்க. இஃது அழுக்காறு தவிரவேண்டு மென்றது.

புலியூர்க் கேசிகன்

தன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே, ஒருவன் தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)அழுக்காறாமை (Azhukkaaraamai)