குறள் (Kural) - 160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
பொருள்
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
Tamil Transliteration
Unnaadhu Norpaar Periyar Pirarsollum
Innaachchol Norpaarin Pin.
மு.வரதராசனார்
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
சாலமன் பாப்பையா
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.
கலைஞர்
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.
பரிமேலழகர்
உண்ணாது நோற்பார் பெரியர் - விரதங்களான் ஊணைத்தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்; பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின்- அவர் பெரியராவது, தம்மைப் பிறர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுப்பாரின் பின் (பிறர் - அறிவிலாதார். நோலாமைக்கு ஏது ஆகிய இருவகைப் பற்றொடு நின்றே நோற்றலின், 'இன்னாச் சொல் நோற்பாரின் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.)
ஞா.தேவநேயப் பாவாணர்
உண்ணாது நோற்பார் பெரியர் - நோன்பினால் உணவைத் தவிர்ந்து பசியையும் தட்ப வெப்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் துறவியர் மக்கட்குட் பெரியவரே; பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின் - ஆயின் அவர் பெரியவராவது பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் இல்லறத்தார்க்கு அடுத்தபடியே. பிறர் என்றது தீயவரை. இன்பம் பெறுதற்குரிய இல்லறத்திலிருந்து கொண்டே துன்பம் பொறுத்தற்குரிய துறவியரினும் மிகுந்த பொறையை மேற்கொள்வதால், முதற்படியாகப் பெரியவர் என்றார்.
மணக்குடவர்
உண்ணாது பொறுப்பார் எல்லாரினும் பெரியர்: அவர் பெரியாராவது பிறர் சொல்லுங் கடுஞ்சொல்லைப் பொறுப்பாரின் பின், இது தவம் பண்ணுவாரினும் பெரியதென்றது.
புலியூர்க் கேசிகன்
உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலே தான் பெரியவர் ஆவர்
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | பொறையுடைமை (Poraiyutaimai) |