குறள் (Kural) - 159

குறள் (Kural) 159
குறள் #159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

பொருள்
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.

Tamil Transliteration
Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai
Innaachchol Norkir Pavar.

மு.வரதராசனார்

வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.

சாலமன் பாப்பையா

நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.

கலைஞர்

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.

பரிமேலழகர்

துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர். (தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.)

ஞா.தேவநேயப் பாவாணர்

இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர்-நெறி கடந்த கீழ் மக்களின் வாயினின்று வரும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலுடைய மேன்மக்கள்; துறந்தாரின் தூய்மை உடையர் - இல்லறத்தின் கண் நின்றாலும் துறவியர் போல மனத் தூய்மையுடைய ராவர். 'வாய்' என மிகைபடக் கூறியது, கீழோர் வாயினின்று தீய சொற்களே மிகுதியாக வரும் என்பதை உணர்த்தற்கு. ஐந்தாம் வேற்றுமை யின்னுருபு உறழ் பொருளிற்கே யுரியதாதலால், துறந்தாரைவிடத் தூயர் எனினுமாம். சுடுகின்ற வெயிலைப் பொறுத்தலினும் சுடுகின்ற சொல்லைப் பொறுத்தல் அரிதாதல் காண்க. 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெயில் பிறப்பிக்காத சினத்தைச் சுடுசொல் பிறப்பித்தலால், அதைப் பொறுத்துக் கொள்ளுதலே மிகுந்த மனத் தூய்மையைக் காட்டும் என்பது கருத்து.

மணக்குடவர்

மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார். இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.

புலியூர்க் கேசிகன்

எல்லை மீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவியர் போலத் தூய்மையாளர் ஆவர்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பொறையுடைமை (Poraiyutaimai)