குறள் (Kural) - 158

குறள் (Kural) 158
குறள் #158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.

பொருள்
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.

Tamil Transliteration
Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham
Thakudhiyaan Vendru Vital.

மு.வரதராசனார்

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

சாலமன் பாப்பையா

மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.

கலைஞர்

ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.

பரிமேலழகர்

மிகுதியான் மிக்கவை செய்தாரை - மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் வென்றுவிடல் - தாம் தம்முடைய பொறையான் வென்றுவிடுக. (தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)

ஞா.தேவநேயப் பாவாணர்

மிகுதியான் மிக்கவை செய்தாரை - செருக்கினால் தமக்குத் தீயவை செய்தவரை ; தாம் தம் தகுதியான் வென்று விடல் - தாம் தம் பொறையினால் வென்று விடுக. சரிக்குச் சரி தீங்கு செய்யும் இழுக்க வெற்றி ஒழுக்கத் தோல்வி யென்றும்; தீயவை செய்தாரைப் பொறுத்துக் கொள்ளும் ஒழுக்க வெற்றியே உண்மையான வெற்றி யென்றும் உணர்த்தற்குத் 'தகுதியான் வென்று விடல்' என்றார். 'விடல்' வியங்கோள் வினை.

மணக்குடவர்

தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக. இது பொறுத்தானென்பது தோல்வியாகாது: அதுதானே வெற்றியாமென்றது.

புலியூர்க் கேசிகன்

செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்று விட வேண்டும்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பொறையுடைமை (Poraiyutaimai)