குறள் (Kural) - 157

குறள் (Kural) 157
குறள் #157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

பொருள்
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

Tamil Transliteration
Thiranalla Tharpirar Seyyinum Nonondhu
Aranalla Seyyaamai Nandru.

மு.வரதராசனார்

தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா

கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.

கலைஞர்

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

பரிமேலழகர்

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.]

ஞா.தேவநேயப் பாவாணர்

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் -செய்யத்தகாத கொடியவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று -- அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக உளம் நொந்து அறனல்லாதவற்றைத் தான் அவர்க்கு செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நல்லதாம். உம்மை உயர்வு சிறப்பு. துன்பத்திற்கு நோதலைத் "தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்" (58) என்னும் நாலடியார்ச் செய்யுளால் அறிந்து கொள்க.

மணக்குடவர்

தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று.

புலியூர்க் கேசிகன்

தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நல்லது

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பொறையுடைமை (Poraiyutaimai)