குறள் (Kural) - 156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
பொருள்
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
Tamil Transliteration
Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup
Pondrun Thunaiyum Pukazh.
மு.வரதராசனார்
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
சாலமன் பாப்பையா
தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
கலைஞர்
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
பரிமேலழகர்
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் - அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம். [ஒருநாளை இன்பம் அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின் ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது]
ஞா.தேவநேயப் பாவாணர்
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை யின்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் -ஆனால், அத்தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம். 'ஒருநாளை யின்பம்' சரிக்குச் சரி செய்தேம் என்னும் பொந்திகை (திருப்தி). புகழ் உலகமுள்ள காலமெல்லாம் தொடருமாதலால் , பொன்றுதல் இங்கு உலகத்தின் தொழில்.
மணக்குடவர்
ஒறுத்தவர்க்கு அற்றைநாளை யின்பமே உண்டாம்: பொறுத்தவர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம். இது புகழுண்டா மென்றது.
புலியூர்க் கேசிகன்
தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் உண்டு
பால் (Paal) | அறத்துப்பால் (Araththuppaal) |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் (Illaraviyal) |
அதிகாரம் (Adhigaram) | பொறையுடைமை (Poraiyutaimai) |