குறள் (Kural) - 155

குறள் (Kural) 155
குறள் #155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

பொருள்
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.

Tamil Transliteration
Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar
Poruththaaraip Ponpor Podhindhu.

மு.வரதராசனார்

( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.

சாலமன் பாப்பையா

தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.

கலைஞர்

தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.

பரிமேலழகர்

ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.)

ஞா.தேவநேயப் பாவாணர்

ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் செய்த தீங்கைப் பொறாது அவனைத் தண்டித்தாரை அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - ஆனால் அத்தீங்கைப் பொறுத்தாரையோ பொன்போற் போற்றி வைத்துக் கொள்வர். தீங்கு செய்தவனைத் தண்டித்தவரும் அத் தீங்கு செய்தவனை யொத்தலின் , 'ஒன்றாக வையார்' என்றார். பொன்போற் பொதிதலாவது மிக மேன்மையாகப் போற்றுதல். ஏகாரம் தேற்றம்.

மணக்குடவர்

தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.

புலியூர்க் கேசிகன்

தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார்; ஆனால், பொறுத்தவர்களைப் பொன்போற் பொதிந்து வைப்பார்கள்

பால் (Paal)அறத்துப்பால் (Araththuppaal)
இயல் (Iyal)இல்லறவியல் (Illaraviyal)
அதிகாரம் (Adhigaram)பொறையுடைமை (Poraiyutaimai)